18

விருட்ஷம்

சிறு வயதில் என் அம்மா

ஒரு விதை கொடுத்து மண்ணில்

இடச் சொன்னார்,செடி ஒன்று வளருமென்றாள்

தினமும் தவறாமல் நீர் விடச் சொன்னாள்

செடி ஒன்று வளருமென்றாள்

என் ஆர்வச் செடி வளர்த்தாள்

பள்ளிக்குச் செல்லுமுன் அம்மா இதெப்போது

வளருமென்பேன்  பள்ளிக்குச் சென்றாலும்

அகலவில்லை பசுமையையாய்ச் செடி

நினைவு என் மனதில் சில நாளில்

அந்த சிறு விதை மண் பிளந்து சிறிதாக

முளை விட்டு வெளியே தலை நீட்டியது

அதிசயமாய்ப் பார்த்தேன் அம்மாவிடம்

கேட்டேன் மண் பிளக்க  சிறு விதைக்கு

பலம் எப்படி வந்ததென்று

அதுதான் மண்ணின் மகத்துவம்

தன்னைப் பிளக்க தானே பலம் கொடுக்கும்

அதுவே வகை செய்யும் பெரு மரம் வளர

தானே பிளந்தும் வழிவிடும்  அதுதான்

தாய்மை தனக்கென்று வைத்திருக்கும்

தனித் தன்மை ,தியாகம் அதன் பெயர்

என்றுரைத்தாள் என் அம்மா அப்போது

புரியவில்லை என் தாயின் அருமையும்

என் மண்ணின் பெருமையும்

என் தாரம் ஒரு மகனைப் பெற்றெடுத்து

என் கையில் கொடுத்தவுடன்

நானும் புரிந்து கொண்டேன்

நல்ல விதை விதைக்க அன்றே

பயிற்சி கொடுத்த என் தாயை

இப்போதென் தாய் மண்ணுக்கடியில்

விதைத்த விதை வாய்வெடித்து

கீழ்வழியே வேர் பரப்பி

பிடிமானம் வெண்டி எண்ணி

மண்மகளைக் கைப்பிடித்து

விண் நோக்கி வளர எண்ணி

காற்றுதனை மூச்சிழுத்து

வேருக்கு நீர் வேண்டி உள்ளுக்குள்

துளைந்து , கிளர்ந்து உள்ளோடிப்

பரவிப் படர்ந்து மண்ணிற்கு வெளியே

சிறிதாகத்தலைநீட்டி இருநிலையாய்ப்

பிரிந்து நடுவே ஒரு குருத்து விட்டு

இப்படியே இயக்கம் கொண்டு

விருட்ஷமாய் வளரும் !

அன்புடன்

          தமிழ்த்தேனீ

rkc1947@gmail.com   http://thamizthenee.blogspot.com

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

குறும்புக் கவிதைகள் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book